வேலூர்: 2021ஆம் ஆண்டின் மருத்துவ படிப்பிற்கான தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வான நீட்(NEET) செப்டம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
நீட் தேர்விற்காக விண்ணப்பித்திருந்த வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் பலரும் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகள் கரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை நாட்டையே நிலைகுலைய செய்தது. இதன் காரணமாக இந்தியாவில் பல்வேறு நாடுகளுக்கான விமான சேவைகளுககு தடை விதிக்கப்பட்டது.
இந்தியா வர இயலாத மாணவர்கள்
2021ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வை எழுத ஓமன் நாட்டிலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் ஏராளமானோர் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக இந்த மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு இந்தியா வர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அப்படியே இந்தியா வந்தாலும் மீண்டும் அவர்கள் ஓமன் நாட்டிற்கு திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. காரணம், ஒமான் நாட்டில் மருத்துவத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே இந்தியாவிலிருந்து வர அனுமதி வழங்கப்படுகிறது.
இதனால் மருத்துவப் பணியாளர்களை தவிர வேறு யாரும் இந்தியாவிலிருந்து ஓமன் நாட்டிற்குச் செல்லமுடியாத நிலை உள்ளது.
பெற்றோர் கோரிக்கை
இதுகுறித்து ஓமனில் வசித்துவரும் பெற்றோர் ஒருவர் கூறுகையில், "தற்போதைய சூழலில் இந்தியாவிற்கு வருவது கடினமான ஒன்று. துபாய், குவைத் ஆகிய நாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்கள் அங்கேயே நீட் தேர்வு எழுதுவதற்காக மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு சென்று எழுதலாம் என்றாலும், கரோனா கட்டுப்பாடுகள் நடைமுறைகள் அமலில் இருப்பதால் எங்களால் அங்கும் பயணிக்க முடியவில்லை. எனவே துபாய், குவைத் ஆகிய நாடுகளில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டது போல் ஓமனிலும் அமைக்க வேண்டும்" என்றார்.
இதுகுறித்து இந்திய பிரதமருக்கும், ஓமனிலுள்ள இந்திய தூதரகத்திற்கும், மின்னஞ்சல் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றும் மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவு சிதையாமல் இருக்க இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: 'எல்லையில் பதற்றம்: காவல் மற்றும் துணைராணுவப்படையினர் 6 பேர் உயிரிழப்பு'