சென்னை: நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றத் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று (பிப்.8) சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிமுக, பாமக, பாஜக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். அப்போது, 'நீட்' யார் ஆட்சியின்போது அறிமுகமானது என்பது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக மற்றும் திமுகவினரிடேயே காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது.
விஜயபாஸ்கர் பேச்சு
பேரவைக் கூட்டத்தில் பேசிய, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், 'நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதில் அதிமுக உறுதியாக உள்ளது. எந்த சூழலிலிருந்தும் இதிலிருந்து வளைந்து நெளிந்து கொடுக்கக் கூடிய இயக்கம் அதிமுக அல்ல' என்றார்.
மேலும், 'அதிமுக யாருக்கோ அடிபணிந்து விட்டோம் என்று சொல்கிற கருத்து தவறானது. நாட்டுக்கு நன்மை பயக்கும் திட்டத்தை அதிமுக ஆதரிக்கும். நாட்டின் நன்மைக்கு எதிராக உள்ள விஷயத்தை நெஞ்சுரத்தோடு அதிமுக எதிர்க்கும்.
நீட் காங்கிரஸ் ஆட்சியில் 2010ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. நாகரிகமாக இந்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் அரசியல் பேசவில்லை’ எனக் கூறினார்.
அப்போது, பேசிய காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவைக்குழுத் தலைவர் செல்வபெருந்தகை இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்
மு.க.ஸ்டாலின் பேச்சு
அப்போது, குறுக்கிட்டுப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'வேறு எதுவும் பிரச்னைகளை திசை திருப்பிவிட வேண்டாம்’ என்றுக் கேட்டுக் கொண்டார்.
மேலும், அவர் 'ஒருமனதாக தீர்மானம் நிறைவேற வேண்டும். மாறாக, 'நீட்' விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார். அதை 2ஆவது நாளே தெரிவித்து விட்டோம். அதிமுக ஆட்சியில் போடப்பட்ட தீர்மானத்தை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பியதை ஒரு ஆண்டு வரை அதிமுக தெரிவிக்கவில்லை' எனத் தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்து பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், '10.7.19 அன்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட மசோதா திருப்பி அனுப்பப்பட்டது.
சட்டத்துறை மூலமாக குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டதற்கான காராணங்கள் கேட்கப்பட்டது என்பதை முதலமைச்சருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒருமித்த கருத்துடன் திராவிடக் கட்சிகள்
சட்ட நுணுக்கத்தோடு அணுக வேண்டிய விஷயம். இது சட்ட வல்லுநர்களைக் கொண்டு இந்த விவகாரத்தை மிக நுணுக்கமாக அணுக வேண்டும்.
இதை அரசியல் ஆக்க வேண்டாம். திராவிடக் கட்சிகள் நீட் எதிர்ப்பு விவகாரத்தில் ஒத்த கருத்துடன் உள்ளது. அரசியலைத் தவிர்த்து, அவதூறுகளைத் தவிர்த்து அரசு எடுக்கும் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு அதிமுக ஆதரவு அளிக்கப்படும்’ எனக் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி கருத்து
பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 'நீட் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு.
எங்கள் மீது அவதூறு பரப்புரை தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. மேலும், தனது ஆட்சிக்காலத்தில் தான் நீட் கொண்டுவரப்பட்டது எனப் பொய் பரப்புரை பரப்பப்பட்டு வருகிறது’ எனக் கூறினார்.
இது குறித்து மேலும் அவர் பேசுகையில், ’நீட் யார் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. இது எல்லோருக்கும் தெரியும். நீட் விவகாரத்தில் அரசு எடுக்கின்ற முயற்சிகளுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும்' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வேளாண் சட்டம்போல நீட் சட்டமும் திரும்பப் பெறப்படும் - அழகிரி நம்பிக்கை