தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் முன்னிலை வகித்து வெற்றி வாகை சூடியுள்ளது. மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திருணமூல் காங்கிரஸ் கட்சி 219 இடங்களில் முன்னிலை வகித்து வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியை அக்கட்சிகளின் தொண்டர்கள் கொண்டாடிவருகின்றனர்.
அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகிய இருவருக்கும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
பாடலாசிரியரும் கவிஞருமான பழனிபாரதி முகநூலில் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், “முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்” என்ற திருக்குறளையும் மேற்கோள்காட்டியுள்ளார்.
இது இறைமாட்சி அதிகாரத்தில் வரக்கூடிய 388ஆவது குறளாகும். இதன் பொருள், "அறநெறி தவறாமல் ஆட்சி செய்து நாட்டு மக்களைக் காப்பவன் மக்களுக்கு சிறந்த தலைவனாக போற்றப்படுகிறான்" என்பதாகும்.