’சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள்' என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை செனாய்நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பழ.கருப்பையா, நடிகர் நாசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அங்கு, நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் முனைவர் பட்டம் வழங்கப்பட்டதற்காக திருமாவளவனுக்குப் பாராட்டு விழாவும் நடைபெற்றது.
விழாவில் பேசிய பழ. கருப்பையா, ’பாரத மாதா என்ற வார்த்தையை அறிமுகப்படுத்திய பாரதி ஒரு வகையில் தமிழர்களின் உண்மைத் தாயான தமிழ்த்தாயைப் புறந்தள்ளிய துரோகத்தைத்தான் செய்துள்ளார். எனவே, உண்மையான தமிழ் கவி என்றால் பாரதிதாசன் தான்’ எனக்குறிப்பிட்டார். புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான பழ.கருப்பையா பாரதி குறித்து பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
அதன் பிறகு பேட்டியளித்த விசிக தலைவர் திருமாவளவன், “ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தத்தை நிறைவேற்றும் பணியைத்தான் பாஜக அரசு செய்து வருகிறது. முதலீட்டை ஈர்ப்பதற்கான அரசுப் பயணம் என்றுதான் முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால், குறிப்பிட்ட சில பெருநிறுவனங்கள் மட்டுமே ஒட்டுமொத்த பொருளாதாரத்தை வைத்திருக்க வேண்டும் என்று பாஜக ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர். இதனை முதலமைச்சர் பழனிசாமி கருத்தில் கொள்ள வேண்டும். தெலங்கானாவில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு எனது வாழ்த்துகள். அவர் தமிழ்நாட்டில் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்” என்றார்.