சென்னை: பெயிண்டை உடலில் ஊற்றிக்கொண்டு படுத்தும், உருண்டும் உதயநிதி ஸ்டாலின் உருவத்தைப் பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் படத்தை வரைந்துள்ளார். பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் கோரி, வித விதமான முறையில் அரசின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
அந்த வரிசையில், திருக்கோவிலூர் அருகே அரசுப் பள்ளியில் பணியாற்றும் பகுதிநேர ஓவிய ஆசிரியர் ஒருவர், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, உடலில் பெயிண்டை ஊற்றிக்கொண்டு, படுத்தும், உருண்டும் உதயநிதி ஸ்டாலின் படத்தை வரைந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த சிவனார் தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம், நூதன முறையில் தொடர்ச்சியாகப் பல வகையான ஓவியங்களை வரைந்து வருகிறார். சமீபத்தில், வாயில் பிரஷ்ஷை வைத்துக்கொண்டே கருணாநிதி, ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் படங்களை வரைந்தார்.
இந்நிலையில், இன்று (நவ.26) உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தனது உடலில் நீர் வண்ணத்தை ஊற்றிக்கொண்டு, தூரிகை பயன்படுத்தாமல், கீழே இருக்கும் பதாகையில் படுத்தும், உருண்டும், நெளிந்தும் ஒரு மணி நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் படத்தை வரைந்து, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிரியரின் நூதன ஓவியத்தைப் பலரும் பார்த்துப் பாராட்டி உள்ளனர்.
இதையும் படிங்க: ஆதரவற்றப் பெண்களுக்கு 5 விலையில்லா ஆடுகள் வழங்கப்படும் - தமிழ்நாடு அரசு