கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் கடந்த 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகள் தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொதுமுடக்கத்தின் போது பொதுமக்களிடம் கண்ணியமாகவும், வாகனங்கள் பறிமுதல் செய்யக்கூடாது என டிஜிபி, காவல்துறையினருக்கு உத்தரவிட்டதால், வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டும் காவலர்கள் பொதுமக்களை தடுத்து நிறுத்தி கேள்வி கேட்கவில்லை.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு கடந்த நான்கு நாள்களாக கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் வாகனங்களிலும், தெருக்களிலும் சுற்றி திரிந்தனர். முழு ஊரடங்கை முறையாக கடைப்பிடிக்கவில்லை என அரசியல் கட்சியினர் பலர் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, முழு ஊரடங்கை கடுமையாக்க முடிவு செய்தனர். இதையடுத்து, ஊரடங்கை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என டிஜிபி எச்சரிக்கை விடுத்தார்.
அதனடிப்படையில் நேற்று (மே14) பல்வேறு இடங்களில் தீவிரமாக வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். ஊரடங்கை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிந்து, வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். முகக் கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
இந்த நிலையில் சென்னையில் ஊரடங்கை மீறியதாக 2,079 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 1,727 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி முககவசம் அணியாமல் சென்றதாக 1,346 நபர்கள் மீது வழக்குப்பதிவு, தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் சென்றதாக 83 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி செயல்பட்ட 64 கடைகள் வழக்குபதிவு செய்துள்ளதாக சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முழு ஊரடங்கை மேலும் கடுமையாக்கும் வகையில் வெளியே சுற்றக்கூடிய நபர்கள் மற்றும் வாகனங்களை கண்காணிக்க ட்ரோன் கருவியை நாளை (மே15) முதல் பயன்படுத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.