சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் 5 மணி நேரமாக கனமழை பெய்துவருகிறது.
குறிப்பாக சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக, பல்வேறு முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மாலை நேரம் என்பதால், வாகனவோட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வாகனங்களை ஓட்டிச்செல்கின்றனர்.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும். இதன்காரணமாக ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த நான்கு மாவட்டங்களிலும் 5 மணி நேரமாக கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் மீண்டும் கனமழை - போக்குவரத்து நெரிசல்