சென்னை: ஆவின் பால் அட்டையை கேட்பவர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக விளங்கும் பால் அனைவருக்கும், குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் அதன் உற்பத்தியை அதிகரிக்கும் பணியில் ஆவின் நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.
2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தலையடுத்து தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற திமுக, தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம், ஆவின் பால் விலையை கடந்த மே 16ஆம் தேதிமுதல் லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் குறைத்து விற்பனை செய்ய ஆணை பிறப்பித்தது. அதன்படி தற்போது விற்பனை நடைபெற்றுவருகிறது.
பால் அட்டைதாரர்களின் விவரங்கள் எதற்காக?
இதன்படி, அட்டை வாயிலாக பால் வாங்குவோருக்கு லிட்டர் 37 ரூபாய் விலையிலும், தேவைக்கேற்ப தினசரி பணம் கொடுத்து பால் வாங்குவோருக்கு லிட்டர் 40 ரூபாய் விலையிலும் பால் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. அனைத்து வகையான பால் வகைகளிலும் அட்டை மூலம் பால் வாங்குவோருக்கும், மற்றவர்களுக்கும் இடையேயான வித்தியாசம் மூன்று ரூபாய்தான்.
இந்தச் சூழ்நிலையில், பால் அட்டை மூலம் பால் வாங்குவோரிடமிருந்து அட்டைதாரர் பெயர், முகவரி, கல்வித் தகுதி, தொழில், மாத சம்பளம், குடும்ப உறுப்பினர்கள் எவ்வளவு காலமாக ஆவின் பால் வாங்கப்படுகிறது, ஆதார் அட்டை எண் அல்லது குடும்ப அட்டை எண் அல்லது வருமான வரி நிரந்தர கணக்கு எண் அல்லது ஓட்டுநர் உரிய பான் அல்லது வங்கிக் கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றில் ஒன்று போன்ற விவரங்கள் விண்ணப்பங்களை ஆவின் நிர்வாகம் கோரியுள்ளது.
இந்தத் தனி நபர் விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டால்தான் அடுத்த மாதம் முதல் பால் அட்டை வழங்கப்படும் என்றும், இதன் காரணமாக எதிர்காலத்தில் நெருக்கடி ஏற்படுமோ என்ற அச்சத்தில் ஆவின் அட்டைதாரர்கள் உள்ளதாகவும் பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது.
பால் அட்டைதாரர்கள் மத்தியில் சந்தேகம்
ஆவின் நிர்வாகம் என்ன காரணத்திற்காக, எதன் அடிப்படையில் இதுபோன்ற விவரங்களை ஆவின் பால் அட்டைதாரர்களிடமிருந்து பெறுகின்றது என்பதைத் தெளிவுபடுத்தாமல், திடீரென்று இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
ஏனென்றால், தனி நபர் விவரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக பால் அட்டைதாரர்கள் சந்தேகிக்கின்றனர். ஆவின் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த இழப்பை ஓரளவு ஈடுசெய்ய பால் அட்டைதாரர்களின் எண்ணிக்கையை குறைக்க ஆவின் நிர்வாகம் இதுபோன்ற மறைமுகமான நடவடிக்கைகளை எடுக்கிறதோ என்ற எண்ணம் பால் அட்டைதாரர்கள் மத்தியில் நிலவுகிறது.
முதலமைச்சருக்கு வேண்டுகோள்
இது உண்மையாக இருப்பின், இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி, ஆவின் நிர்வாகம் எதற்காக தனிநபர் விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை பால் அட்டைதாரர்களிடமிருந்து கோருகிறது என்பதைத் தெளிவுப்படுத்தப்பட வேண்டும்.
ஆவின் பால் அட்டைகள் கேட்டவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதையும், பால் அட்டைதாரர்களின் எண்ணிக்கையை குறைக்கும் பாகையில் மறைமுகமாக எந்த நடவடிக்கையையும் ஆவின் நிர்வாகம் எடுக்கக்கூடாது. இதனை, முதலமைச்சர் உறுதிசெய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பால் கெட்டுப் போன விவகாரம் - 2 பேரை பணியிடை நீக்கம் செய்த ஆவின்