சென்னை: இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் தோல்வி பயத்தால் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கருணாநிதி அவர்களின் இரண்டாவது மகள் மாணவி கனிமொழி, நீட் நுழைவுத் தேர்வினை எழுதிவிட்டு, தேர்வின் முடிவினை எதிர்கொள்ள இயலாமல் தன்னுடைய இன்னுயிரை மாய்த்துக்கொண்டார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், மன வேதனையும், சொல்லொண்ணா துயரமும் அடைந்தேன்.
மாணவி கனிமொழியை இழந்து வாடும் அவருடைய பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பறந்துவிரிந்த படிப்புகள்
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே, பொதுவாக, மாணவச் செல்வங்களின் எதிர்காலக் கனவை, வாழ்க்கையை நிர்ணயிக்கக் கூடிய படிப்பு ப்ளஸ் 2, இதன் பிறகுதான் மாணவர்கள் மருத்துவர்களாக ஆக வேண்டுமா ? பொறியாளர்களாக ஆக வேண்டுமா ? ஆடிட்டர்களாக ஆக வேண்டுமா ? வேளாண் பட்டதாரிகளாக ஆக வேண்டுமா ? பொருளாதார நிபுணர்களாக ஆக வேண்டுமா ? வரலாற்று ஆராய்சியாளர்களாக ஆக வேண்டுமா ? என முடிவு செய்வார்கள். நான் கூறியது ஒருசில மட்டுமே.
கணினி படிப்பு, தத்துவம், அரசியல், சமூகவியல், இயற்பியல், உயிரியல் , வேதியியல் கணிதம், நிர்வாகம், கலைத் துறை குறித்த படிப்புகள் என, நம்முடைய படிப்புகள் மேலும் பறந்து விரிந்து உள்ளன. மருத்துவப் படிப்பு என்பது பெரும்பான்மையான மாணவர்களின் கனவு ஆகும் .
ஆனால், மருத்துவப் படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை. மருத்துவத்திற்கு பக்கபலமாக உள்ள நர்சிங் படிப்பு, பார்மசிஸ்ட் படிப்பு, ஸ்கேனிங், கண் கண்ணாடி தொழில் படிப்பு, மருத்துவப் பொறியியல் என்று குறைந்தபட்சம் 40க்கும் மேற்பட்ட மருத்துவம் சம்பந்தப்பட்ட பல இணை படிப்புகள் உள்ளன.
பெற்றோர், ஆசிரியர்களின் வேலை
இவற்றைப் படிப்பதற்கு நீட் நுழைவுத் தேர்வு தேவையில்லை. பலதரப்பட்ட நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கும் பலர் மருத்துவர்கள் அல்ல. எனவே , பெற்றோர்களும், ஆசிரியப் பெருமக்களும், மாணாக்கர்களுக்கு மருத்துவத் துறையின் பலதரப்பட்ட படிப்புகளை விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும் என்று நான் இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
மாணவச் செல்வங்களும், ப்ளஸ் 2க்குப் பிறகு, மருத்துவம் தவிர, மருத்துவம் சார்ந்த படிப்பு என்று தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். தற்கொலை முடிவு என்பது ஆபத்தானது. இதுபோன்ற எண்ணங்கள் மாணவச் செல்வங்களாகிய உங்கள் மனதில் ஏற்படும்போது, நீங்கள் எப்போதும் தனியாக இருக்காதீர்கள். உங்கள் அம்மாவிடமோ, அப்பாவிடமோ, உடன் பிறந்தோர் அருகிலோ எப்போதும் இருக்கும்படி இருங்கள்.
பெற்றோரை நினைத்துப் பாருங்கள்
உங்களை ப்ளஸ் 2 வரை படிக்க வைக்க, உங்களது பெற்றோர் பட்ட கஷ்டங்களையும், நீங்கள் இரவு, பகலாக விழித்திருந்து தேர்வு எழுதி வாங்கிய மதிப்பெண்களையும் மனதில் நிலை நிறுத்துங்கள். உங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களை நினைவு கூறுங்கள். உங்கள் நண்பர்களோடு நேரத்தை செலவழியுங்கள்.
அரியலூர் மாணவி கனிமொழியின் இழப்பே நீட்டுக்கான நமது கடைசி இழப்பாக இருக்கட்டும் என்று அனைத்து மாணவச் செல்வங்களையும் கை கூப்பி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். திமுக தனது அரசியல் நாடகத்தையும் , நீட் பயத்தால் மாணவர்கள் உயிரிழப்பதை வேடிக்கை பார்ப்பதையும் இனியாவது நிறுத்திவிட்டு, மாணவர்களின் நலன் கருதி உண்மை நிலையை மக்களுக்கும், மாணவர்களுக்கும் விளக்க வேண்டும்.
நீட் எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங்
தேவைப்படின் நீட் தேர்வு எழுதிய மாணாக்கர்களுக்கு ஆசிரியப் பெருமக்கள், உளவியல் நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய ஒரு குழு மூலம் சிறப்பு வகுப்பு ஒன்றினை நடத்தி, மாணவச் செல்வங்களின் மனதில் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் வளர்ப்பதோடு, நீட் நுழைவுத் தேர்வில் தோல்வியடைய நேர்ந்தால், மருத்துவம் தவிர மருத்துவத்தில் உள்ள மற்ற படிப்புகள் என்னென்ன, அதனால் என்ன பயன் என்பதை விளக்கமாக எடுத்துச்சொல்லுங்கள்.
நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் சமயத்தில், பெற்றோர்கள் எப்போதும் தங்களது மகன், மகள் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து, தக்க அறிவுரை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இனிமேல், மாணவச் செல்வங்கள் இதுபோன்ற விபரீதமான முடிவினை எடுக்க வேண்டாம் என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நீட் தேர்வு மரணங்களுக்கு திமுகவே காரணம் - அண்ணாமலை