இரண்டாயிரத்து 340 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்த பணிக்கான விதிமுறைகள் மற்றும் கல்வித் தகுதிகள் குறித்து பல்வேறு தகவல்களை அதில் கூறியுள்ளனர்.
அந்த அறிக்கையில் முறையான பல்கலைக்கழகங்களில் பெறப்பட்ட பட்டங்கள் மட்டுமே செல்லும் என்றும், தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட எம்.பில்., மற்றும் பி.ஹெச்டி பட்டங்கள் செல்லாது எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலும் திறந்தநிலை, தொலைதூரக்கல்வி முறையில் பெற்ற பட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ம் தேதியிட்ட உயர்கல்வித்துறை அரசாணையின்படி இந்த அறிவிப்பு செய்யப்படுவதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இதனால் இந்த பல்கலைக்கழகத்தில் எம்.பில்., மற்றும் பி.ஹெச்டி பட்டங்கள் பெற்றவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசே நடத்தக்கூடிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட பட்டங்கள் செல்லாது என்று அவ்வரசே அறிவிப்பது மிகப்பெரும் முரண்பாடு என கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.