சென்னை: பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதிய மாணவர்களில் 22 சதவீதம் மட்டுமே தேர்ச்சி, 12ஆம் வகுப்பு தனித்தேர்வில் வெறும் 12 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா காரணமாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை. பள்ளிகளில் படித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர். ஆனாலும் தனித்தேர்வர்களாக பதிவு செய்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படாமல் சமீபத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டன . இந்த தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
தேர்வு எழுதிய 39 ஆயிரம் மாணவர்களில், 22 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்து இருக்கின்றனர். மற்ற மாணவர்கள் அனைவரும் தோல்வி அடைந்திருக்கின்றனர் என்று தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பள்ளி மாணவர்களைப் போல தனித்தேர்வு மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ஏற்காமல் தேர்வு நடத்தப்பட்டது. அதேபோல் பன்னிரண்டாம் வகுப்பு தனித்தேர்வு முடிவிலும் மிகக் குறைந்த அளவு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 40 ஆயிரம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில் 12 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்து இருக்கின்றனர். மற்ற மாணவர்கள் தோல்வி அடைந்து இருப்பதாகவும் தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: பொறியியல் கல்லூரிகளில் கட் ஆஃப் மதிப்பெண் உயர வாய்ப்பு