அதிமுகவின் ஜூன் 23ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானம் குறித்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமையை வலியுறுத்தி பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால் அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் புயலை கிளப்பியுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் முயற்சி செய்தும் பலனிலை
2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல் போன்ற தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி அதிமுக தேர்தல் களம் கண்டது. 2021 தேர்தல் முடிந்தவுடன் எதிர்கட்சி தலைவர் ஆவதற்கு கடுமையாக ஓ.பன்னீர்செல்வம் முயற்சி செய்தும் பலனில்லை. அதையும் எடப்பாடி பழனிசாமி கைப்பற்றினார்.
இது ஒருபுறம் இருக்க தேர்தல்களில் அதிமுக தொடர் தோல்வி, இரட்டை தலைமை என்பதால் முடிகள் எதுவும் எடுக்க முடியாத சூழ்நிலை போன்றவைகளாக தொண்டர்கள் தொய்வடைந்த நிலையிலிருந்தனர். பிரதான எதிர்கட்சியாக கூட செயல்பட முடியவில்லை என விமர்சனங்களும் எழுந்தன.
இதனால் பாஜக மற்றும் பாமக போன்ற கட்சிகள் நாங்கள் தான் எதிர்கட்சிகள் என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அதிமுக செயல்பாடுகள் மோசமாக இருந்தது. 2021 சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பின்பு வி.கே.சசிகலா அதிமுகவை கைப்பற்றுவேன் என சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இப்படிபட்ட விறுவிறுப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு ஜூன் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.
சசிகலாவின் ஆதரவாளர்களை கையாளுவது எப்படி
நேற்று(ஜூன்.14) பொதுக்குழுவில் நிறைவேற்றபடும் தீர்மானங்கள் குறித்து விவாதிப்பதற்காக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஒற்றை தலைமையை விரும்புவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் கூட்டத்தில் ஒற்றை தலைமையாக ஓபிஎஸ்-சை தேர்தெடுக்க வேண்டும் என்று ஒரு தரப்பும், ஈபிஎஸ்-சை தேர்ந்தெடுக்க வேண்டும் என ஒரு தரப்பும் கூறியுள்ளனர். இப்படி மாறி மாறி கூறியதால் இருதரப்பிற்கும் காரசார விவாதம் நடைபெற்றது. மேலும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்தும், வி.கே.சசிகலாவின் ஆதரவாளர்களை கையாளுவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இரண்டாவது நாளாக இன்றும் (ஜூன்.15) ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். முகாம்களில் ஆலோசனைகளுக்கு பஞ்சமின்ற காட்சிகள் நகர்கின்றன. இதுகுறித்து நம்மிடையே அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறுகையில், “அன்றே அதிமுக இரட்டை தலைமையாக தான் இருந்தது. ஆனால் ஜானகி எனக்கு அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கியதால்தான் ஜெயலலிதா ஒற்றை தலைமையாக வர முடிந்தது.
எடப்பாடி பழனிசாமி நகர்ந்தால் அதிமுக பிளவுபடும்
தேர்தல் ஆணையத்தால் அங்கிகரீக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர்களாக ஓபிஎஸ், ஈபிஎஸ் செயல்பட்டு வருகின்றனர். இரண்டு ஒருங்கிணைப்பாளர்களில் சக்திவாய்ந்த நபராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமையாக வர வேண்டும் என அவரது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
ஒற்றை தலைமைதான் தீர்வு என்றால் நீங்களும் இருக்க வேண்டாம், நானும் இருக்க வேண்டாம் மூன்றாவது ஒரு நபருக்கு வாய்ப்பு கொடுப்போம் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்படும். அதிகப்படியான ஆதரவு எனக்கு இருக்கிறது என எடப்பாடி பழனிசாமி நகர்ந்தால் அதிமுக பிளவுபடுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இரட்டை இலையில் ஆளுக்கு ஒரு இலை
தொடர்ந்து பேசிய அவர், ஒரு தரப்பினருக்கு தலைமை பொறுப்பு தரப்பட்டால், இன்னொரு தரப்பினரிடையே கடுமையான எதிர்ப்புகள் இருக்கும். இதனால் இரட்டை இலையில் ஆளுக்கு ஒரு இலை என்று போகக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. இன்றைய சூழலில் மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களில் அதிகளவு ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்குதான் இருக்கிறது என வெளிப்படையாக தெரிந்த ஒன்று.
ஒற்றை தலைமை விவகாரத்தில் இரண்டு பேருமே கவனமாகதான் அடி எடுத்து வைப்பார்கள். மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுகவினரிடையே ஒற்றை தலைமைக்கான கோரிக்கை இருக்கிறது என்பது உண்மை”. ஒற்றை தலைமையா...? அல்லது இரட்டை தலைமையா...? என்பது குறித்து ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒற்றை தலைமை தேர்ந்தெடுக்கப்பட்டால் அதிமுகவில் பிளவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: குடியரசு தலைவர் தேர்தல் - திமுகவின் நிலைப்பாடு என்ன?