சென்னை: சௌகார்பேட்டையில் மினிலாரி மோதியதில் மீன்பாடி வண்டி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சௌகார்பேட்டை பகுதியில் மீன்பாடி வண்டி ஒட்டி வந்தவர் பழனிமுத்து. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் சுமார் 20 ஆண்டுகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி, 3 மகள்களுடன் பெரம்பலூர் மாவட்டம் புதுவேட்டக்குடி கிராமத்தில் வசித்து வருகின்றார். நேற்றிரவு கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் தனது மீன்பாடி வண்டியில் உறங்கிக்கொண்டு இருந்த பழனிமுத்து வண்டியின் மீது, திடீரென்று தண்ணீர் கேன் ஏற்றிவந்த மினிலாரி மோதியது. இதில் பழனிமுத்து வாகனத்துடன் உருண்டு கீழே விழுந்தார்.
இதில் உள்காயமடைந்த பழனிமுத்து, நெஞ்சு வலிப்பதாக தெரிவித்துள்ளார். உடனடியாக அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டு, அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக பூக்கடை போக்குவரத்து காவல் துறையினர் மினிலாரி ஓட்டுநரான நிஷான் (18) என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது.