சென்னை: ஆன்லைன் லோன் ஆப் (Online Loan App) மூலம் பொதுமக்கள் பலர் கடன் வாங்கி பல மடங்கு வட்டி செலுத்தி மோசடியில் சிக்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு சமூக வலைதள பக்கத்தில் நேற்று (ஜூன்15) வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடன் தருவதாக நினைத்து ஆன்லைன் லோன் ஆப்பை பொதுமக்கள் பலர் பதிவிறக்கம் செய்கின்றனர்.
செயலியை பதிவிறக்கம் செய்யும்போது செல்போனில் உள்ள தகவல்களை எடுப்பதற்கான பல்வேறு அனுமதிகளை அளிக்கின்றனர். பின்னர், வாங்கிய கடனை விட பல மடங்கு வட்டி கேட்டு அந்த கும்பல் மிரட்டி, அதன் பிறகு அவர்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து செல்போனில் உள்ள அனைத்து எண்களுக்கும் அனுப்பப்படும் என மிரட்டி பணப்பறிப்பில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் ஆன்லைன் லோன் வாங்கி, பல்வேறு இளம் தலைமுறையினர் பலதரப்பட்ட இன்னல்களுக்கு ஆளானவை குறித்து நமது ஈடி பாரத் தமிழ்நாடு ஊடகத்திலும் கூட செய்தி வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை.. இந்தா வாங்கிக்கோ... ஆன்லைன் லோன் மோசடியில் சிக்கித் தவிக்கும் இளம்பெண்கள், இளைஞர்கள்!
எனவே, குறிப்பாக Euvalt, Masen Rupee, Lory Loan, Wingo Loan, Cici Loan, உள்ளிட்ட லோன் செயலிகள் மோசடியில் ஈடுபடுவதாகவும், பொதுமக்கள் யாரும் இவற்றை டவுன்லோடு செய்ய வேண்டாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
இது போன்று பல ஆன்லைன் மோசடி செயலிகள் உருவாகி வருவதாகவும், அவற்றை முடக்க தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Online loan Fraud: 3 மாதத்தில் ரூ.11 கோடி வரை மோசடி; புனே சென்று 4 பேரை தூக்கிய தேனி போலீஸ்!