இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மத்திய அரசின் மக்கள் விரோத, விவசாயிகள் விரோத சட்டங்களுக்கும் கொள்கைகளுக்கும் எதிராக ஒன்றுபட்டு விவசாயிகள் வாக்களித்திருக்கிறார்கள்.
விவசாயிகளின் ஒன்றுப்பட்ட போராட்டம் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்கும் நிலையை ஏற்பட்டுத்தி உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகளின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பாக காவிரி டெல்டா விவசாயிகள் பெற்ற காவிரி உரிமை பறிபோய்விடுமோ? உபரி நீர் திட்டம் என்கிற பெயரில் மேட்டூர் அணை உடைக்கப்பட்டு காவிரி டெல்டா அழிந்து விடுவோமே? என்ற அச்சத்தில் டெல்டா விவசாயிகள் ஒன்றுபட்டு வாக்களித்து மகத்தான வெற்றியை தந்துள்ளனர்.
அத்தோடு தமிழ்நாட்டில் பெரும் பகுதி மக்கள் விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு வாழக்கூடிய கிராமப்பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு மிகுந்த நம்பிக்கையோடும், எதிர்பார்ப்போடும் வாக்களித்து பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியமைக்கும் நிலையை ஏற்படுத்தி இருக்கின்றனர்.
அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தொடர்ந்து தேர்தலுக்கு முதல் நாள் வரை, அஇஅதிமுக, பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது என பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
எனவே திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி விவசாயிகளுடைய நலனுக்காகவும்,இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்கும், அபகரிக்கும் நடவடிக்கைகளை தடுப்பதற்கும் ஒன்றுபட்டு போராடி உரிமைகளை பாதுகாக்க விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர முன்னுரிமை கொடுத்து செயல்பட முதலமைச்சராக பொறுப்பேற்கும் முக ஸ்டாலின் முன்வர வேண்டுமென வேண்டுகிறோம் வாழ்த்துகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார் .