சென்னை அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
'அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் விதிமுறைகளின்படி ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகள் தங்களின் அங்கீகாரத்தை புதுப்பித்துக் கொள்வதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த ஆண்டிற்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் அங்கீகாரம் புதுப்பித்தலுக்கான பணிகள் நடைபெற்றது.
அனைத்துப் பணிகளும் மே மாதம் 15ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு அங்கீகாரத்தினை கல்லூரிகளுக்கு அளிக்க வேண்டும். இந்த ஆண்டு இளங்கலை, முதுகலை பொறியியல் பாடப்பிரிவுகளை நடத்தக்கூடிய 537 கல்லூரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதுதவிர 158 பொறியியல் கல்லூரிகள் தங்களின் கல்லூரிகளில் நடத்தப்படும் 428 பாடப்பிரிவுகளுக்கான அறிக்கையை ஆய்வின்போது தாக்கல் செய்தனர்.
அதேபோல், 92 பொறியியல் கல்லூரிகளில் 300 பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்கள், ஆய்வகங்கள் உள்ளிட்டவை இல்லாமல் உள்ளன. இதனால் இந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இந்தாண்டு முற்றிலுமாக அனுமதிக்கப்படாது.
மேலும் கல்லூரியில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப மாணவர் சேர்க்கைக்கு உரிய எண்ணிக்கையும் குறைக்கப்படும். எனவே இந்தாண்டு சுமார் 9 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பொறியியல் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கைக்குரிய இடங்கள்குறைய வாய்ப்புள்ளது.
பொறியியல் படிப்பிற்கான அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்காத 22 கல்லூரிகள் இந்த ஆண்டு மாணவர்களை சேர்க்க முடியாது. அங்கீகாரம் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்துவிட்டது. இதனால் இவர்கள் அடுத்த ஆண்டிற்குதான் விண்ணப்பிக்க முடியும்' என தெரிவித்தார்.