ரத்தின சபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகிய மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்களும் டிடிவி தினகரனுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கின்றனர். இதனையடுத்து 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசு கொறடா ராஜேந்திரன், மூன்று பேர் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பியிருந்தார். இதனையடுத்து அவர்களுக்கு சபாநாயகர் தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நோட்டீஸ் எதுவும் அனுப்பபடவில்லை.
இந்த சூழலில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில், ரத்தின சபாபதி, பிரபு, கலைச்செல்வன் - இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏவான தமிமுன் அன்சாரி ஆகிய நான்கு பேரும் அதிமுகவுக்கு எதிராக வேறு கட்சிக்கு பரப்புரையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சபாநாயகர் தனபாலை சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோர் இன்று சந்தித்தனர். இந்தச் சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. இந்தச் சந்திப்பின்போது அரசுக்கு எதிராக நான்கு எம்எல்ஏக்களும் செயல்பட்ட புகாரின் அடிப்படையில் அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவெடுத்திருப்பதாகவும், விரைவில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.