கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தொழில் நிறுவனங்கள் மூடப்பட்ட நாட்களை சிறப்பு விடுமுறையாக அறிவிக்கக் கோரி வழக்கறிஞர் ரவீந்திரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு காணொலி மூலம் விசாரித்தது.
அப்போது, தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் திருத்தச் சட்டத்தின்படி, சிறப்பு விடுமுறை என்பது ஒரு நாள் மட்டுமே அறிவிக்க முடியும் என்றும், இதுபோன்ற ஊரடங்கு காலத்தில் தொடர்ச்சியாக நிறுவனங்கள் மூடப்படும் போது, அத்தனை நாட்களையும் சிறப்பு விடுமுறையாக அறிவிக்க முடியாது என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு அரசுக்கு எதிரான இந்த வழக்கில் மத்திய அரசு, தென்னிந்திய தொழிலாளர் சம்மேளனம், கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா தலைவர் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக சேர்த்து, மே 28ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
மேலும், உற்பத்தி துறையில் நாட்டில் முன்னணி மாநிலமாக உள்ள தமிழ்நாட்டில், தொழிற்சாலைகள் திறம்படவும், லாபகரமாகவும் இயங்கினால் தான் மத்திய - மாநில அரசுகளின் வருமானம் பெருகும் என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், 2005ஆம் ஆண்டின் பேரிடர் மேலாண்மை சட்டத்தில் உள்ள விதிகளை ஆராய்ந்து உரிய பதிலளிக்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.