நிர்வாக ரீதியான கோப்புகள், வழக்கு ரீதியான கோப்புகளை முறையாகப் பராமரிப்பது பல்வேறு பணிகளுக்கிடையில் காவல் துறையினருக்கு கடினமாகவே இருந்துவந்தது. இந்நிலையில் அவர்களது பணியை எளிமைப்படுத்தும் பொருட்டு காகிதமற்ற முறையில் கோப்புகளைக் கையாள இ-ஆபிஸ் என்ற மென்பொருள் செயலி மூலம் வழிவகை செய்யப்பட்டு தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநரகத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
கடந்த ஒரு மாதகாலமாக இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், தகவல் தொழில்நுட்ப அறிவியல் பின்னணி கொண்ட சுமார் 25 துணை ஆய்வாளர்கள் மாநிலம் முழுவதுமிருந்து தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்த காகிதமற்ற முறை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது பற்றி கருத்து கூறியுள்ள தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் ஜே.கே. திரிபாதி, இந்த முறையானது கோப்புகளின் இயக்கத்தை எளிமைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வெளிப்படைத் தன்மையையும் பொறுப்புடைமையையும் கொண்டு வந்துள்ளதாகவும் கூறினார். மேலும், இது கோப்புகளை விரைவாக அகற்றுவதற்கு வசதியளிப்பது மட்டுமல்லாமல், மனித சக்தியை நியாயமான முறையில் பயன்படுத்தவும் நிர்வாகத்தைச் சிறந்த முறையில் நடத்தவும் வழிவகுப்பதாகவும் தெரிவித்தார்.
இதுவரை இ-ஆபிஸ் மூலம் செயல்பாட்டுக்கு வந்துள்ள இந்த காகிதமற்ற கோப்பு பராமரிப்பு முறையானது இயக்குநரகம் மட்டுமல்லாது மூன்று காவல் ஆணையர் அலுவலகங்களிலும் 15 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. விரைவில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல் துறை அலுவலகங்களில் செயல்பாட்டுக்கு வரவிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.