சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், "தமிழ்நாட்டில் வரலாற்று நிகழ்வாக ஒரே நேரத்தில் ஒன்பது அரசு மருத்துவக் கல்லூரிகளை அரசு தொடங்கியுள்ளது. இதற்காக தலா நூறு கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
மேலும், கூடுதலாக கள்ளக்குறிச்சி, கடலூர், காஞ்சிபுரம், அரியலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மத்திய அரசிடம் அதற்கான கடிதத்தை அளித்துள்ளோம். மத்திய அரசின் தொழில்நுட்பக் குழு விரைவில் ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவில் பிற மாநிலங்களில் இருந்து புதிய மருத்துவக் கல்லூரிக்கு 100 இடங்களை மட்டுமே கேட்கின்றனர். ஆனால் தமிழ்நாடு மட்டுமே 150 இடங்களில் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். பெறப்படும் இடங்களில் அகில இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி 15 விழுக்காடு இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு அளிக்கப்படும். மற்ற 85 விழுக்காடு இடங்கள் முழுவதுமாக தமிழ்நாடு மாணவர்களுக்கு அளிக்கப்படும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒரு மாணவருக்கு ஆண்டுக் கட்டணமாக 13 ஆயிரத்து 400 ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்படுகிறது. தற்போது பின்பற்றப்படும் கூடிய மருத்துவ இட ஒதுக்கீட்டு முறையில் எந்தவித மாற்றமும் கிடையாது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிப்பதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சமூகநீதிக்கு பாதிப்பு வரும் எந்தவித இட ஒதுக்கீட்டையும் அரசு நடைமுறைப்படுத்தாது என முடிவெடுத்துள்ளோம். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் பெறக்கூடிய இடங்களை விட கூடுதலான இடங்களை நாம் பெற்றுள்ளோம்" என்று கூறினார்.
மேலும், மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படுவதால் அதிக அளவில் ஏழை எளிய மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் நிலை உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கமல்ஹாசனுடன் கூட்டணியா? சீமான் பதில்