சர்ச்சைக்கு மறுபெயர் ஒன்று இருக்குமென்றால் அது நித்தியானந்தா என்றே இருக்கும். அப்படிப்பட்ட சர்ச்சை நாயகன் நித்தியானந்தா மீது நேற்றும் ஒரு சர்ச்சை கிளம்பியது. பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன் சர்மா என்பவர், அகமதாபாத்திலுள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் கடத்தி வைக்கப்பட்டுள்ள தன்னுடைய இரு மகள்களை மீட்டுத் தருமாறு ஆட்கொணர்வு மனுவை குஜராத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “கடந்த 2013ஆம் ஆண்டு என்னுடைய நான்கு மகள்களை(7 முதல் 15 வயது) பெங்களூருவிலுள்ள நித்தியானந்தா கல்வி நிறுவனத்தில் சேர்த்தேன். சில நாட்களுக்குப் பிறகு நால்வரையும் அகமதாபாத் கல்வி நிறுவனத்திற்கு மாற்றியுள்ளார்கள். அங்கு சென்று எங்கள் மகள்களை காண நானும் என் மனைவியும் முயற்சித்தபோது, ஆசிரமத்துக்குள்ளேயே எங்களை அனுமதிக்கவில்லை. பின்னர், காவல் துறையினரின் உதவியுடன் எங்களுடைய இளைய மகள்கள் இருவரையும் மீட்டுவிட்டோம். ஆனால், மூத்த மகள்கள் இருவரும்(லோபமுத்திரா, நந்திதா) எங்களுடன் வருவதற்கு சம்மதிக்கவில்லை.
நாங்கள் மீண்டும் முயற்சித்து குழந்தைகள் நல ஆணைய அலுவலர்களுடன் ஆசிரமம் சென்றோம். கடும் வாக்குவாதத்துக்குப் பின் ஆசிரம உதவியாளர்கள் எங்களை உள்ளே அனுமத்தித்தனர். உள்ளே சென்று தேடியபோது, அங்கு எனது இரு மகள்களும் இல்லை. இது குறித்து கேட்டதற்கு அவர்கள் வெளியில் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டதாக ஊழியர்கள் கூறினார்கள். ஆனால், எங்கள் மகள்களை கடத்தி வைத்துள்ளார்கள் என்று சந்தேகிக்கிறேன். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரை காவல் நிலையத்திலும் அவர் கொடுத்தார். அதன்படி, சாமியார் நித்தியானந்தா உள்ளிட்ட ஆறு பேர் மீது எஃப்ஐஆர் வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், கடத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்ட ஜனார்த்தன் சர்மாவின் இரண்டாவது மகளான நந்திதா தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார்.
இவர் தன் பெயரை தற்போது மா நித்தியானந்தா என்று மாற்றி வைத்துள்ளார். தமிழ்நாட்டில் இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றே கூறலாம். ஆம், வைரமுத்து ஆண்டாள் குறித்து எழுதி சர்ச்சையான விவகாரத்தில், வைரமுத்துவை மிக இழிவாகப் பேசி வீடியோ வெளியிட்டவர்தான் இந்த மா நித்தியானந்தா.
அவர் தற்போது வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது, “யாரும் என்னைக் கடத்தவில்லை. நான் மிகவும் பத்திரமாக இருக்கிறேன். என் விருப்பம் போலவே பல இடங்களுக்குச் சென்று வருகிறேன். நான் விரும்பியே வேறு ஒரு இடத்திற்கு தற்போது வந்துள்ளேன். என்னை மனரீதியாக காயப்படுத்துவதற்காக சிலர் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.
ஆனால், நான் கடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுவது என்னை பெரிதும் பாதித்துள்ளது. நான் கடத்தப்பட்டதாகக் கூறி என்னுடைய மன அழுத்தத்தை அவர்கள் அதிகரிக்கின்றனர். மற்றபடி நித்யானந்தாவின் ஆசிரமத்தினால் எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை", என்று பேசியுள்ளார். மேலும் தன்னுடைய சகோதரி லோபமுத்திராவும் அவருடைய விருப்பப்படியே தங்கியுள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, ஜனார்த்தன் சர்மா தன்னுடைய மகளை மூளைச்சலவை செய்து அவர்கள் விருப்பப்படி ஆட்டுவிப்பதாகவும், விரைவில் தன்னுடைய மகளை மீட்க போராடுவேன் என்றும் கூறியுள்ளார். இதனிடையே நித்தியானந்தா ஆசிரமத்தில் பணிபுரிந்த இரு பெண் ஊழியர்களை அகமதாபாத் காவல் துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். மேலும், நித்தியானந்தா குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நானா? ஜீவசமாதியா? - நோ சொன்ன நித்தியானந்தம்!