தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் II, குரூப் IIA - அதாவது, நேர்முகத்தேர்வு, நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளுக்கும் ஒரே மாதிரியான தேர்வாக, அதாவது, முதனிலை (Prelims), முதன்மை (Mains) எழுத்துத்தேர்வு கொண்டவையாக மாற்றியுள்ளது.
இரண்டு பதவிகளுக்கும் தனித்தனியே தேர்வுகள் நடத்துவதால் தேவையற்ற கால விரயமும் பொதுமக்களின் வரிப்பணமும் வீணாவதுடன் விண்ணப்பதாரர்களும் இரண்டு முறை தேர்வுக்கு தயாராக வேண்டியுள்ளது. எனவே இரண்டு தெரிவுகளுக்கும் ஒரே தேர்வாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டம் - தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் முக்கியத்துவம்:
இதுநாள் வரை குரூப் II, குரூப் IIA முதனிலை (Prelims) தேர்வுகளில் பொது அறிவு 100 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 100 வினாக்களும் கேட்கப்பட்டு வந்தன. விண்ணப்பதாரர்கள் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் இரண்டில் ஏதேனும் ஒன்றில் தேர்வு எழுதி தெரிவாக முடியும்.
அதாவது தமிழ் தெரியாதவர்கள் கூட இவ்வகையான தேர்வுகளை எழுத முடியும் என்ற நிலை இருந்தது. அதனால் தற்போது பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டு, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் முதனிலை (Prelims) தேர்வின் பாடத்திட்டத்தில் இரண்டு அலகுகள் (Units) சேர்க்கப்பட்டுள்ளன.
முதனிலைத் (Prelims) தேர்வில் நீக்கப்பட்ட பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கில பகுதிகள் முதன்மைத் (Mains) எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் கூடுதல் முக்கியத்துவத்துடன் சேர்க்கப்பட்டுள்ளன.
முதனிலைத் (Prelims) தேர்வுக்கான பாடத்திட்டத்தில் தமிழ் சமூகத்தின் வரலாறு, அகழாய்வுகளின் கண்டுபிடிப்புகள், சங்ககாலம் தொட்டு தற்காலம் வரையிலான தமிழ் இலக்கியம், சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு, 19ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழ்நாட்டின் சமூக மற்றும் அரசியல் இயக்கங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
திருக்குறளுக்கு முக்கியத்துவம்:
மிக முக்கியமாக திருக்குறளுக்கு தனியே முக்கியத்துவம் தரப்பட்டு பல்வேறு தலைப்புகளில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வுக்கான பாடத்திட்டத்தில் சமூக நீதி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவற்றின் அடிப்படைக் கொள்கைகள், சமூக நல்லிணக்கம், தமிழ்நாட்டின் கல்வி மற்றும் சுகாதார அமைப்புகள் போன்ற தமிழ்நாடு தொடர்பான பல்வேறு தலைப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
முதன்மை (Mains) எழுத்துத் தேர்வில் மொழிப்புலமை:
மேற்படி தெரிவுகளில் தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், கண்டிப்பாக தமிழ்நாட்டின் வரலாற்றையும் தமிழ் மொழியையும் அறிந்தவர்களாகவும் தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் கோப்புகள் எழுதும் திறன் உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்று தேர்வாணையம் கருதுவதால், மேற்படி தெரிவின் முதன்மைத் (Mains) தேர்வில், தமிழ் – ஆங்கிலம் மொழிபெயர்ப்பு; ஆங்கிலம் - தமிழ் மொழிபெயர்ப்பு; சுருக்கி வரைதல்; கட்டுரை எழுதுதல்; குறிப்புகளைக் கொண்டு விளக்கி எழுதுதல்; திருக்குறள் பற்றி கட்டுரை, அலுவலகக் கடிதம் எழுதுதல் ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் வரலாற்றுக்கு முக்கியத்துவம்:
முதன்மை எழுத்துத் தேர்விலும் தமிழுக்கும் தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் தரும்வகையில் தமிழர் நாகரிகத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி, சங்க கால இலக்கியம், தமிழ்நாட்டின் இசைப் பாரம்பரியம், நாடகக் கலை, பகுத்தறிவு இயக்கம், சமூக சீர்த்திருத்த இயக்கங்கள், பெண்ணியம் மற்றும் தற்கால தமிழ்மொழி குறித்த பாடத்திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.