இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் படிப்படியாக கட்டுப்பாட்டுக்குள் வருவது நிம்மதியளித்தாலும் கூட, சென்னையில் கரோனா பரவல் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. சென்னை போன்ற மக்கள் நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது சிக்கலான ஒன்றுதான் என்றாலும், புதுமையான உத்திகளின் மூலம் நிலைமையை சமாளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்து விட்ட நிலையில், சென்னையில் நோயை கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். சென்னையில் மொத்தம் 140 பகுதிகள் தீவிர நோய் பாதிப்பு பகுதிகளாக அடையாளம் காணப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்தப் பகுதிகள் தனியாக பிரிக்கப்பட்டு, தீவிர நோய் பாதிப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் மொத்தம் 420 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சென்னை மாநகரில், நோய் பாதிப்பு உள்ள பகுதிகள் மட்டும் 2 சதுர கிலோ மீட்டராக சுருக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் கரோனா அறிகுறியுடன் காணப்படுபவர்களை உடனடியாக சோதித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிப்பதன் மூலம் மட்டுமே சென்னை மாநகரத்தை கரோனா வைரஸ் நோயின் பிடியிலிருந்து காப்பாற்ற முடியும்.
நோய் அறிகுறிகள் கொண்டவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தால், அவர்களை எங்கு, எப்போது, எத்தகைய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதற்கான செயல்திட்டத்தை வகுத்து, விரைந்து செயல்படுத்த வேண்டும். அதன்மூலம் சென்னையில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்த பணிகள் முடிவடையும் வரை சென்னை மாநகர மக்கள் ஊரடங்கை தீவிரமாக கடைபிடித்து, நோய் தடுப்புப் பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்". இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.