இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தேர்தல்–2021 தொடர்பாக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், கரோனா தொற்றால் செயல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கு, அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் கருணாநிதி பிறந்த நாள் முதல் ரூ.4000 வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்திருந்தார்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, நோய்ப் பரவலைத் தடுக்கும் பொருட்டு, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கரோனா நோய் தொற்றின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும், பெருந்தொற்று நேரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், ரூ.4153.39 கோடி செலவில், மே 2021 மாதத்தில் 2,07,66,950 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2000 நிவாரணத் தொகையினை முதல் தவணையாக வழங்க ஏற்கெனவே முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தற்போது நடைமுறைக்கு வந்துள்ள 2,14,950 புதிய அரிசி குடும்ப அட்டைகளை பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்களின் வாழ்வாதாரத்திற்கும் மேற்கூறிய உதவியை வழங்கிடும் வகையில், ரூ.42.99 கோடி செலவில் மே 2021 மாதத்தில் ரூ.2,000 நிவாரணத் தொகையினை முதல் தவணையாக வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்" என தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.