சென்னை: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "உலக நாடுகளை அச்சுறுத்திவரும் ஒமைக்ரான் தொற்று பரவல், தமிழ்நாட்டில் இதுவரை கண்டறியப்படவில்லை. அப்படி தொற்று கண்டறியப்பட்டால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
கர்நாடகாவில் ஒமைக்ரான்
இதனிடையே, ஒமைக்ரான் தொற்று இந்தியாவில் முதல்முறையாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருவருக்கு உறுதியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், அவர்களுடன் தொடர்பிலிருந்த 5 பேருக்கும் இந்தத்தொற்று பரவியதாக கூறப்படுகிறது.
இதனால், தமிழ்நாடு-கர்நாடக எல்லை பகுதியில் மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஒமைக்ரான் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகும் நிலையில் இந்தத் தொற்று பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.