சென்னை: நீட் தேர்வு பயத்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான சரவணன், 3 மாணவர்கள் தற்கொலை தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், நீட் தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலக் கூடிய மாணவர்கள் மட்டுமே அதிகளவில் தேர்ச்சி பெறுவதாகவும், மாநில பாடத்திட்டத்தில் பயிலக் கூடிய மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நீட் தேர்வு தொடர்பாக மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய ஆலோசனைகளை வழங்கவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளார். எனவே, மாணவர்களின் தற்கொலையை தடுக்கும் வகையில் மனித உரிமைகள் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது இந்த மனு விசாரணை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வரும் நாள்களில் தேசிய மனித உரிமைகள் ஆணையம், மத்திய-மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பு: தற்கொலை எண்ணம் உங்களுக்கு மேலோங்கினால், அதிலிருந்து வெளிவரவும், புதியதொரு வாழ்க்கையினை தொடங்கிடவும், உங்களுக்கான ஆலோசனைகளை எந்த நேரத்திலும் வழங்கிட அரசும், சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் காத்திருக்கின்றன.
உதவிக்கு அழையுங்கள்: அரசு உதவி மையம் எண் - 104, சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம் - +91 44 2464 0050, +91 44 2464 0060