சென்னை: 2020-21ஆம் கல்வியாண்டில் அதிக எண்ணிக்கையிலான மாணவ- மாணவியர்கள் எம்.பி.பி.எஸ். மருத்துவக் கல்வியில் சேர்ந்து பயிலும் வகையில் ‘இன்னர் வீர் டிஸ்ட்ரிக்ட் 323’ மற்றும் கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்களின் கூட்டமைப்பு மூலமாகச் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவியர்களுக்கு நீட் சிறப்பு பயிற்சியினை, 100 நாள்களுக்கு இலவசமாக அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு “நீட் - என்னால் முடியும்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
சென்னை பள்ளிகளில் பயிலும் 100 மாணவ, மாணவியர்களைத் தேர்வு செய்ய, சென்னை வடக்கு பகுதி மாணவர்களுக்கு எம்.எச். சாலையிலுள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், சென்னை தெற்கு பகுதி மாணவர்களுக்குப் புலியூர் சென்னை மேல்நிலைப்பள்ளியிலும் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன.
இதில் எம்.எச். சாலை பள்ளி மையத்தில் தேர்வெழுதிய 103 மாணவ, மாணவியர்களில் 50 மாணவ, மாணவியர்களும், புலியூர் பள்ளி மையத்தில் தேர்வெழுதிய 130 மாணவ, மாணவியர்களில் 51 மாணவ, மாணவியர்களுமான மொத்தம் 101 மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டு, தக்க வல்லுநர்களைக் கொண்டு 100 நாள்களுக்கு முழுமையான நீட் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எம்.பி.பி.எஸ். மருத்துவ பட்டப் படிப்பிற்கான சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடாக அறிவித்ததன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய 60 மாணவர்களில் 11 மாணவ, மாணவியர்கள் எம்.பி.பி.எஸ். பயிலும் வாய்ப்பினை 2020ஆம் ஆண்டு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.