புதுச்சேரியை அடுத்துள்ள தமிழ்நாடு எல்லைப் பகுதியான நடுக்குப்பம் கடற்கரையோர மீனவர் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கட்டுமரப் படகுகளை எடுத்துச் சென்று மீன்பிடித்து தொழில் நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு பேரிடர் காலங்களில் தங்கள் படகுகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கு அரசு இடம் ஒதுக்கி தரவில்லை. இதனால், இயற்கை சீற்றம், புயல், மழைக்காலங்களில் கடற்கரையோர கரைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகள் கடலில் அடித்துச் செல்லப்படுகின்றன.
மேலும் படகுகள் கற்கலில் மோதி சேதமடைவதால் அருகிலுள்ள இடுகாட்டிலும் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைத்து வருகின்றனர். இதனிடையே, இடுகாட்டில் வைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக படகுகளை நிறுத்த பாதுகாப்பான இடம்தரக்கோரி அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். ஆனால், அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மீனவர்கள் நடவடிக்கை எடுக்காத அரசைக் கண்டித்து கடலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:சுருக்குமடி வலையை அனுமதிக்க மீனவர்கள் போராட்டம், கடலுக்குள் இறங்கிய பெண்களால் பரபரப்பு