சென்னை: பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த சந்தேகங்களை தீர்ப்பதற்கும், மாணவர்கள் இதுகுறித்து விரிந்த அறிவைப் பெறும் வகையில் "நான் முதல்வன்" என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது என்றும், இந்த இணையதளத்தில் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து பல்வேறு தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பலதுறை நிபுணர்களைக் கொண்டு ஏப்ரல் 18, 19, 22, 23 ஆகிய நான்கு நாட்களில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது என்றும், அதில், மருத்துவம் மற்றும் அது சார்ந்த அறிவியல், பொறியியல் மற்றும் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், வங்கிப் பண பரிவர்த்தனை சேவைகள் மற்றும் காப்பீடு, விவசாயம், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் தொலைத்தொடர்பு சட்டம், பாதுகாப்பு சேவைகள் போன்ற பல துறைகளில் அனுபவம் பெற்ற நிபுணர்கள் விளக்கம் அளிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதோடு, நுழைவுத் தேர்வுகள் மற்றும் பல்வேறு உயர் படிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நூல் விலை உயர்வு: அதிமுக, காங்கிரஸ் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்