மறைந்த கவிஞரும், பாடலாசிரியருமான நா. முத்துக்குமாருக்கு ஆதவன் என்ற மகனும், மகா லட்சுமி என்ற மகளும் இருக்கிறார்கள். ஆதவன் தற்போது ஏழாம் வகுப்பு படித்துவருகிறார். மகா லட்சுமியும் பள்ளியில் படித்துவருகிறார்.
இந்நிலையில், ஆதவன் நா. முத்துக்குமார் போகி, தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் தினத்துக்காக கவிதைகளை எழுதியிருக்கிறார். தனக்கேயுரிய மழலைச் சிந்தனையோடு அவர் எழுதியிருக்கும் கவிதைகள் பின்வருமாறு
போகி பண்டிகை
நீ உன் ஆணவத்தை அன்பில் எரி
இதை செய்பவனுக்கு வாழ்க்கை சரி
கோயிலில் இருக்கும் தேரு
பானை செய்ய தேவை சேறு
வீட்டில் இருக்கும் வீண் பொருட்களை வெளியே போடு
இல்லையென்றால் வீடு ஆகிடும் காடு
தமிழரின் பெருமை மண் வாசனை
இந்த கவிதை என் யோசனை
தை பொங்கல்
உழவர்களை அண்ணாந்து பாரு
உலகத்தில் அன்பை சேரு
அவர்களால்தான் நமக்கு கிடைக்கிறது சோறு
அவர்கள் இல்லையென்றால் சோற்றுக்கு பெரும் பாடு
உழவர்கள் நமது சொந்தம்
இதை சொன்னது தமிழர் பந்தம்
பொங்கல் இன்றும் என்றும் சொல்லும்
இவர்கள் இல்லையென்றால் கிடைக்காது நெல்லும்
மாட்டு பொங்கல்
வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு
நீ உன் வேட்டியைத் தூக்கி கட்டு
கரும்பை இரண்டாக வெட்டு
நீ உன் துணிச்சலுக்கு கை தட்டு
சிப்பிக்குள் இருக்கும் முத்து
மாடு தமிழர்களின் சொத்து
மாடு எங்கள் சாமி
நீ உன் அன்பை இங்கு காமி
காணும் பொங்கல்
உறவினர்கள் வந்தார்களா என்று பாரு
உலகத்தில் நல்ல நண்பர்களை சேரு
நீ அழகாகக் கோலம் போடு
உன் நல்ல உள்ளத்தோடு
நீ உனக்குள் கடவுளைத் தேடு
இல்லையென்றால் நீ படுவாய் பாடு
பெண்ணை கண்ணாக பாரு
இல்லையென்றால் கிடைக்காது சோறு....
அதுமட்டுமின்றி, சில மாதங்களுக்கு முன்பு, தமிழ் இலக்கிய அறக்கட்டளை சார்பாக வெளியிடப்பட்ட ‘பேசும் மை’ என்ற புத்தகத்தில் ஆதவன் எழுதியிருந்த கவிதை இடம்பெற்றிருந்தது என்பதும், அந்தக் கவிதைக்காக அவர் ‘வளரும் கவிஞர் ’ விருதை பெற்றார் என்பதும் கவனிக்கத்தக்கது.
தற்போது ஆதவன் எழுதியிருக்கும் கவிதைகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. மேலும், தற்போதே ஒரு நா. முத்துக்குமார் உருவாகத் தொடங்கிவிட்டார் என்று நா. முத்துக்குமாரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.