மதுரை: மகளிருக்கு எல்லா அலுவலகங்களிலும் தனிக் கழிப்பறைகள் அமைத்துத் தரவேண்டும் என்ற சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கைக் கடிதத்தின் அடிப்படையில், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள (SBI) பாரத ஸ்டேட் வங்கி வட்டார அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மார்ச் 5ஆம் தேதியான நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கடந்த ஜன.25, 2022 அன்று நான் பாரத ஸ்டேட் வங்கி சேர்மனுக்கு, மகளிர் ஊழியர்களுக்கு எல்லா ஸ்டேட் வங்கி அலுவலகங்களிலும் தனிக் கழிப்பறை உறுதி செய்யப்பட வேண்டும் எனக் கூறி கடிதம் எழுதி இருந்தேன்.
மகளிர் தனிக் கழிப்பறை
அதற்கு, பாரத ஸ்டேட் வங்கி மைய அலுவலகத்தில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் மனித வளம் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் துணை மேலாண்மை இயக்குநர் ஓம் பிரகாஷ் மிஸ்ரா எனக்கு எழுதியுள்ள கடிதத்தில், 2018ஆம் ஆண்டிலேயே மகளிர் தனிக் கழிப்பறை அமைத்திட வலியுறுத்தி சுற்றறிக்கை விடுத்துள்ளோம்.
எனினும் உங்களின் கடிதம் கிடைத்தவுடன் எங்களின் எல்லா வட்டார அலுவலகங்களுக்கும் மகளிர் தனிக் கழிப்பறைகளை, எல்லா கிளை அலுவலகங்களிலும் உறுதி செய்திட வேண்டுமென மீண்டும் அறிவுறுத்தல்களைத் தந்துள்ளோம். மகளிருக்கு தனிக் கழிப்பறை இல்லாத அலுவலகங்களில் உடனே அமைத்திடக் கட்டட உரிமையாளர்களிடம் பேசுமாறும், கட்டட உரிமையாளர்கள் இயலாதெனக் கூறினால், மாற்று ஏற்பாடுகளைச் செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளோம் எனக் கூறியுள்ளார்.
உடனடி நடவடிக்கை
ஸ்டேட் வங்கியின் பதிலுக்கு நன்றி. இப்பிரச்சினையை எனது கவனத்திற்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (Bank Employees Federation of India) மற்றும் அதன் மகளிர் துணைக் குழு கொண்டு வந்திருந்தது. ஸ்டேட் வங்கி மைய அலுவலக வழிகாட்டல் உடனடியாக வட்டார அலுவலகங்களால் அமலாக்கப்படும் என நம்புகிறேன். பாலின நிகர் நிலை, பெண்களின் பிரத்யேக கோரிக்கைகளில் ஒரு நேர் மறை நகர்வு இதுவாகும்" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மீட்புப்பணிக்காக போரை நிறுத்திய ரஷ்யா