சென்னை குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் தொழிற்சாலைக்கு சொந்தமாக இருந்த நிலங்கள், 1982-ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் அரசுடைமையாக்கப்பட்டது.
அந்த நிலங்களை நீராதாரங்களுக்கு பயன்படும் வகையில் 1984-ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் 1996-இல் குரோம் தோல் தொழிற்சாலை தலைவராக இருந்த ஜெகத்ரட்சகன், 1.55 ஏக்கர் நிலத்தை நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தின் விதிகளை மீறி, 41 பயனாளிகளுக்கு பிரித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
நீராதாரங்களுக்கு பயன்படும் வகையில் ஒதுக்கப்பட்ட நிலத்தை, தனிநபர்களுக்கு பிரித்துக் கொடுத்து விட்டதாக ஜெகத்ரட்சகன் மீது புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புகார் குறித்து விசாரிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து இந்தப் புகார் குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்தப் புகார் தொடர்பான விசாரணைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி, விசாரணைக்கு திமுக எம்பி ஜெகத்ரட்சகன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இந்தப் புகார் தொடர்பாக ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த்திற்கு எழும்பூர் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்காக இன்று(ஆகஸ்ட் 19) மதியம் எழும்பூர் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், ஜெகத்ரட்சகன் மகன் சந்தீப் ஆனந்த் இன்று(ஆகஸ்ட் 19) விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகவில்லை.
அவரது வழக்கறிஞர்கள் இரண்டு பேர் எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் ஜெகத்ரட்சகனின் மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் 15 நாள்கள் அவகாசம் கேட்டு சிபிசிஐடி காவல்துறையினரிடம் மனு கொடுத்துள்ளனர். மேலும் வழக்கு விசாரணையில் ஆஜராவதில் இருந்து 15 நாள்கள் அவகாசமும் கேட்டுள்ளனர்.