சென்னை ஓட்டேரி பகுதியில் வசித்து வரக்கூடியவர் சுமிதா(40)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு 17 வயதில் மகள் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புளியந்தோப்பை சேர்ந்த முத்துக்குமார்(50) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவில் இருந்து வந்தார்.
நாளடைவில் முத்துக்குமார் சுமிதாவின் 17வயது மகள் மீது ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கு தாயும் சம்மதித்ததால் கடந்த 1 வருடங்களாக முத்துக்குமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றால் காவல்துறையினரிடம் சிக்கிவிடுவோம் என்ற பயத்தினால் சுமிதா வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்ட போது மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், வீட்டிலேயே வைத்து பிரசவம் பார்த்தார். சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து பிறந்த குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் வேறு வழியின்றி நம்மாழ்வார்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.
அப்போது குழந்தையின் தாயின் ஆதார்கார்டை செவிலியர்கள் கேட்டப்போது, மழுப்பலாக பதிலளித்து வந்தார். ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே சிகிச்சையளிக்க முடியும் என செவிலியர்கள் கூறியுள்ளனர். வேறு வழியின்றி ஆதார் கார்டை காண்பிக்கும் போது குழந்தையின் தாய்க்கு 17 வயது என்பது தெரியவந்தது.
பின்னர் குழந்தையின் தந்தையை கேட்டப்போது முத்துக்குமாரை காண்பித்த போது அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் குழந்தைகள் நல அமைப்பு அளித்த புகாரின் பேரில் தாய் மற்றும் அவரது காதலன் முத்துக்குமார் மீது புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த புளியந்தோப்பை சேர்ந்த முத்துக்குமார் (50) மற்றும் அவரது தாயை பொன்னேரியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தன்பாலின ரவுடி அவினேஷ் கொலை வழக்கு; 3 பேருக்கு குண்டாஸ்!