புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனை, பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கரோனா நிலவரம் குறித்து உரையாற்றினார்.
இதுகுறித்து ஆளுநர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “பிரதமர் மோடி புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவின் தற்போதைய சூழ்நிலை குறித்து முழு விவரங்களையும் மிகுந்த அக்கறையுடன் கேட்டறிந்தார். மேலும் கரோனா நோய் தொற்று விகிதம், ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள், கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட விவரங்கள் போன்றவற்றை துல்லியமாக கேட்டார்.
புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என உறுதியளித்தார். மத்திய அரசால் வழங்கப்பட்ட வென்டிலேட்டர்கள் முறையாக பயன்படுத்தப்படுகிறதா எனவும் வினவினார். எனது வேண்டுகோளுக்கிணங்க கரோனா சிகிச்சைக்காக மத்திய அரசு வழங்கிய மருத்துவ உதவிகள், உபகரணங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டேன்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் உடல்நிலை பற்றி மிகுந்த அக்கறையுடன் நலம் விசாரித்தார். அவர் விரைவில் பூரண நலம் பெற்று மக்கள் பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்” என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மாவட்டங்களிடையே பயணம் செய்ய இ-பதிவு கட்டாயம்!