மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை துப்பாகியால் சுட்டு அவமதிப்பு செய்த இந்து மகாசபா பொறுப்பாளர்களை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை வகித்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன்,
மோடி அரசுக்கு எதிராக நாடே திரும்பி பார்க்கக்கூடிய வகையில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை இணைத்து, மாபெரும் பேரணியை நடத்தியவர் மம்தா பானர்ஜி. அரசியல் ஆதாயம் கருதி மேற்கு வங்கத்தில் சி.பி.ஐயை ஏவி விட்டு,அவருக்கு கடுமையான நெருக்கடியை மோடி அரசு தருகிறது. இது மிகவும் வெட்கக்கேடான ஒரு செயல். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தலைகுனிவு செயலாகும்.
தேசத்தின் தந்தை என்று நாடே போற்றிக் போற்றிக்கொண்டிருக்கும் காந்தியடிகளை சுட்டு கொன்ற நாதுராம் கோட்சேவின் வாரிசுகள், இன்றும் அதே வன்மத்தை வெளிப்படுத்துவது அதிர்ச்சியளிக்கிறது. ஆளும் பாஜக அரசின் கொள்கைகளுக்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும், அவர்களது இல்லம் தேடிச் சென்று படுகொலை செய்கின்ற அளவுக்கு சனாதன பயங்கரவாதம் தலைவிரித்து ஆடுகிறது.
ஆயுதங்ககளை ஏந்தி திரிபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தாக்குதல் நடத்தும் அமைப்புகளை தடை செய்ய வக்கு இல்லாத மோடி அரசு, பாஜக ஆளும் மாநிலங்களில் ஜனநாயக சிந்தனையாளர்களை நசுக்குவது கண்டனத்துக்குரியது. பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில் சின்னத்தம்பி யானையை, கும்கி யானையாக மாற்றுவதை தமிழக அரசு கைவிட வேண்டும், என்று வலியுறுத்தினார்.