சென்னை: நேற்று (டிசம்பர் 30) மாலை கனமழை கொட்டித்தீர்த்தது. திடீரென பெய்த மழையால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த மழையால் மக்கள் மிகவும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
நள்ளிரவில் ஆய்வு செய்த முதலமைச்சர்
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரிய மேடு, ரிப்பன் மாளிகை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் மழை பாதிப்புகள் குறித்தும் மற்றும் அவற்றைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் நேற்று நள்ளிரவில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை பொதுமக்கள் மழைப் பாதிப்புகள் பற்றிய புகார்களைத் தெரிவிக்கும் உதவி மையத்தில் ஆய்வு செய்து, பொதுமக்களுக்க உரிய நேரத்தில் உதவிகள் சென்றடைய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
உடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அலுவலர்களும் உடனிருந்தனர்.
வானிலை கணிப்புகளையும் மீறி மழை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பதிவு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,"வானிலைக் கணிப்புகளையும் மீறி கொட்டித் தீர்க்கிறது மழை. எதிர்பாராத மழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதோடு, கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது."
"திருச்சியிலிருந்து திரும்பியவுடன், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டளை மையத்திற்கு வந்து, எடுக்கப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளேன். நிலைமை விரைந்து சீர்செய்யப்படும்.
பொதுமக்களும் கவனமுடன் தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்வதோடு, மழைக்கால வழிகாட்டுதல்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்." என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Heavy rains lash Chennai: சென்னையில் மீண்டும் கனமழை - போக்குவரத்து நெரிசல்