டெல்லி: வடகிழக்குப் பருவமழையின் காரணமாகச் சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக ஏற்பட்ட சேதாரங்களுக்கான நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காகத் தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (National Disaster Relief Fund) தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கிட வலியுறுத்தி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (16.1.2022) கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தை இன்று (17.01.2022) டெல்லியில் திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர். பாலு, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து வழங்கினார்.
தமிழ்நாட்டிற்கு ரூ.6230.45 கோடி நிதி தேவை
அக்கடிதத்தில், 2021 வடகிழக்குப் பருவமழையின்போது தமிழ்நாட்டில் வரலாறு காணாத மழை பெய்து சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தியதை, ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள தனது கடிதத்தில் நினைவூட்டப்பட்டுள்ளது.
நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை நிறைவேற்ற ஒன்றிய அரசிடமிருந்து ரூ.6,230.45 கோடி நிதி உதவிகோரி தனது அரசால் மூன்று முறை கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும்;
கோவிட்-19 பெருந்தொற்றின் மூன்றாவது அலை ஏற்கெனவே பரவியுள்ள சூழலில், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை மாநில அரசு முழுமையாக முடுக்கிவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தேசியப் பேரிடர் நிவாரண நிதி
மேலும், இதற்கான பெரும் நிதித் தேவை மாநில நிதிநிலையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடிய அதே வேளையில், கரோனா கட்டுப்படுத்துதலுக்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு விதிமுறைகள், ஏற்கெனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரத்தை மேலும் கூட்டுவதாக அமைந்திருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கும் மாநில நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"எனவே, வெள்ளச் சேதங்களுக்கான சீரமைப்புப் பணிகளுக்காகத் தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக நிதி விடுவிக்கப்பட்டால், அது மாநில மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்" என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், தமிழ்நாட்டிற்கு விரைந்து நிதியுதவி அளிப்பதற்குத் தாங்கள் உதவிட வேண்டும் என்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டைச் சார்ந்த விடுதலை வீரர் உருவங்களுக்கு அனுமதி மறுப்பு - முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம்