சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14.03.2022) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் விடுதலைப் போராட்ட வீரரும், பொதுவுடைமை சிந்தனையாளருமான தோழர் ஜீவா என்றழைக்கப்படும் பா.ஜீவானந்தத்தின் பேரனான ம.ஜீவானந்த் (மாற்றுத்திறனாளி) அவர்களுக்குத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் காலியாகவுள்ள இளநிலை உதவியாளர் பணியிடத்தில் தேர்வானதற்கு, சிறப்பு பணிநியமன ஆணையினை வழங்கினார்.
4 பேருக்கு பணிநியமனம்
தமிழ்நாட்டில் இயங்கிவரும் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், சுயநிதி தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் ஒன்றிய அளவில் செயல்படும் பள்ளிகளில் அரசின் நலத்திட்ட உதவிகளைக் கொண்டு சேர்த்தல் மற்றும் மாணவர்களின் கற்றல் மேம்பாட்டினைத் தொடர்ந்து கண்காணிப்பது போன்ற முக்கிய ஆய்வு பணி அலுவலர்களாக தொடக்க கல்வி இயக்ககத்தின் வட்டாரக்கல்வி அலுவலர்கள் பணிபுரிகிறார்கள்.
அதில், காலியாகவுள்ள பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 95 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்குவதன் அடையாளமாகத் தமிழ்நாடு முதலமைச்சர் 4 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
அதனைத்தொடர்ந்து, அரசுப்பள்ளிகளில் தொழில் நுட்பக்கட்டமைப்பை வலிமைப்படுத்தல், எளிமையாகத் தொழில் நுட்ப கற்றல் வளங்களைப் பள்ளிகளில் உருவாக்குவது, தொழில் நுட்ப மற்றும் கணினிமயமான பள்ளிகளின் செயல்முறைக்கு ஏற்றவகையில், ஆசிரியர்களின் தொழில்நுட்பத்திறனை மேம்படுத்துவது போன்ற பணிகளுக்கு, தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை மற்றும் Cognizant நிறுவனத்துடன் இணைந்து பள்ளிகளில் தொழில் நுட்பத் தரமேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், கணினிமயக் கற்றல் மேம்பாட்டுத் திட்டத்திற்கு Cognizant நிறுவனம் அறிவுசார் பங்குதாரராக, தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து செயலாற்றும்.
நூல் வெளியீடு
மேலும் திசைதோறும் திராவிடம் திட்டத்தின் கீழ், கலைஞர் எழுதிய, பேராசிரியர் ஜெயபிரகாஷ் அவர்களால் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்ட “திருக்குறள் உரை” மற்றும் எழுத்தாளர் சுந்தர ராமசாமி எழுதி, திருமதி கௌரி கிருபானந்தன் அவர்கள் தெலுங்கில் மொழிபெயர்த்த “ஒரு புளியமரத்தின் கதை” ஆகிய நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.
இத்திட்டத்தில் வெளியிடப்படும் 7-வது மற்றும் 8-வது நூல்கள் இவைகள் ஆகும். இந்நூல்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால், ஹைதராபாத் புக் டிரஸ்ட் நிறுவனத்தோடு கூட்டு வெளியீடுகளாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: சென்னை போக்குவரத்துத்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் ரெய்டு