சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் மூத்த மருத்துவர் சந்திரசேகர் இடமாற்றம் செய்யப்படுவதாக நேற்று சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டது. மாஸ்க் உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவு இல்லை என்றும், அதனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு அவர் கடிதம் எழுதியதே இந்த இடமாறுதல் உத்தரவுக்கு காரணம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
இந்நிலையில், கரோனா வைரஸ் தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில், பல்வேறு விவகாரங்களைக் குறிப்பிட்ட ஸ்டாலின், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முழு வீச்சுடன் செயல்பட வேண்டிய மாநில அரசு, அதனை விடுத்துவிட்டு ஸ்டான்லி மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஜி. சந்திரசேகரை அவசரம் அவசரமாக தூத்துக்குடிக்கு இடமாற்றியது என்று கெள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உரிய விளக்கத்தை அளித்திட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.