அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கான ஒருநாள் ஊக்கமளிக்கும் முகாம் சென்னையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "ப. சிதம்பரம் வீட்டில் நடைபெறுவது நீதிமன்றம் சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை. டெல்லி நீதிமன்றம் தனது கருத்தைத் தெளிவாகக் கூறியுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் மூளையாகச் செயல்பட்டவர் எனக்கூறியுள்ளது. நீதிமன்றத்தின் கருத்தின் அடிப்படையில் சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.
தொடர்ந்து, ப.சிதம்பரம் போன்ற முக்கியத் தலைவர்கள் எந்த வழக்காக இருந்தாலும் குற்றமற்றவர் என தானாக முன்வந்து எதிகொள்ள வேண்டுமே தவிர, ஓடி ஒளிவது நல்லதல்ல எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சர் பழனிசாமி மாநிலத்தின் வளர்ச்சிப் பணிக்காக மட்டுமே வெளிநாடு செல்கிறார் என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வர முடியவில்லை என்று விரக்தியின் எல்லைக்கே சென்றுவிட்டதால் முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து விமர்சனம் செய்து வருகிறார் என்றும் கூறினார்.