உலக பக்கவாத மற்றும் சொரியாசிஸ் நாளை முன்னிட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "கரோனா சிகிச்சை முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், பிற நோயாளிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாத வகையில், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பக்கவாத நோய்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சொரியாசிஸ் நோய் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணியில், கரோனா தடுப்பு முன் களப்பணியாளர்கள் தொடர்ந்து செயலாற்றி வருகின்றனர். விழா நாட்கள் வருவதால் மக்கள் மிகுந்த பாதுகாப்போடு இருக்க வேண்டும் “ என்றார்.
தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், “அரசு மருத்துவமனையில் மழை நீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கீழ்தளத்தில் உள்ளவர்களை மேல்தளத்திற்கு மாற்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது “ என்றார்.
இதையும் படிங்க: வட கிழக்கு பருவ மழை எப்படி இருக்கும் - வெதர் மேன் விளக்கம்