சென்னை: சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமையில்
சென்னை, காமராசர் சாலையில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் துறைவாரியான ஆய்வுக் கூட்டம் இன்று (ஜூலை 20) நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்தில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 'நம்ம குடியிருப்பு' எனும் செயலியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கிவைத்தார். 'நம்ம குடியிருப்பு' செயலி மூலம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புதாரர்கள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தவணைகளை எளிய முறையில் செலுத்திட முடியும்.
இந்த செயலியை குடியிருப்புதாரர்கள் தங்களது அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டு வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மாத தவணைத் தொகை, நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்திற்கான பராமரிப்பு தொகை, நிலுவைத் தொகை போன்றவற்றை செலுத்தலாம். www.tnuhdb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தொகையினை QR code மூலமாகவும் செலுத்தலாம்.
நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்தின்கீழ் இதுவரை 417 குடியிருப்போர் நலச்சங்கம் உருவாக்கப்பட்டு 206 குடியிருப்போர் நலச்சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியிருப்போர் நலச்சங்கம் பத்திரப்பதிவு துறையில் பதிவிற்கான கட்டணம், அரசால் குடியிருப்போர் நலச்சங்கத்திற்கு திருப்பி வழங்கப்படுகிறது. கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வு கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் ஹித்தேஷ்குமார், எஸ்.மக்வானா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த ராவ், வாரிய இணை மேலாண்மை இயக்குநர் தங்கவேல், வாரிய பொறியாளர்கள் துர்காமூர்த்தி துறை வாரியான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட பள்ளியில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க ஏற்பாடு