சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும். இது தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் நேரில் மனு அளித்துள்ளார். செந்தில் பாலாஜி பணம் பெற்றுக் கொண்டு வேலை வழங்கியதற்கான ஆதாரத்தை தெள்ளத் தெளிவாக தெரிவித்துள்ளோம்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் பாஜகவும் மனு தாக்கல் செய்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த இருக்கிறோம்,”, என தெரிவித்துள்ளார்.
முன்னதாக பேசிய அவர், “மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அரசு பள்ளியில் படித்த மாணவி அகிலாண்டேஸ்வரி நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில் இவர்களை கொண்டாட தமிழ்நாடு அரசும், பள்ளிக் கல்வித் துறையும் தவறிவிட்டது. நீட் விவகாரத்தை வைத்து பாரதிய ஜனதா கட்சி அரசியல் செய்யவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள ஆளுங்கட்சியான திமுக அரசியல் செய்து வருகிறது.
நீட் தேர்வு அமுல்படுத்திய போது 2016 ஆம் ஆண்டு அதன் பின்னர் சில ஆண்டுகள் சில பிரச்சினைகள் இருந்த நிலையில் அதற்கு காரணம் தமிழ்நாட்டில் உள்ள மேம்படுத்தப்படாத பாடத்திட்ட முறைகள் தான். மேலும் தற்போது அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் அதிகம் பேர் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் வரை தேர்வு எழுதி இருக்கின்றனர்.
இவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் எவ்வித கோச்சிங் வழிகாட்டு நெறிமுறை எவ்வித உதவியும் செய்யாத நிலையில் அவர்கள் தேர்வு எழுதி இருக்கின்றனர். அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வு தேர்ச்சி அடைந்துள்ள மாணவ மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்காத தமிழ்நாடு முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவிக்கின்றேன்.
நாட்டில் உள்ள அனைத்து முதலமைச்சர்களும் நீட் தேர்வை எதிர்க்காத நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். மேலும் நீட் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு எவ்வித உதவிகளும் அளிக்காத நிலையில் அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்காமல், வேண்டாம் வெறுப்பாக நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களை பார்க்கிறார்.
நீட் தேர்வுக்கு முன்னர் திமுக நிர்வாகிகளின் குழந்தைகள், கவர்னர் கோட்டா மூலம் மருத்துவ படிப்புகளை சேர்ந்து படித்துள்ளனர். தற்போது நீட் தேர்வால் அது ரத்து செய்யப்பட்டுள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு இயற்றிய சட்ட திருத்தத்தை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்புவார்.
மேலும் நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை தற்கொலைக்கு தூண்டக்கூடிய வகையில் அமைச்சர்கள் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். திமுக அமைச்சர்கள் நீட் தேர்வால் யாராவது தற்கொலை செய்து விட மாட்டார்களா? என தேடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இன்று முதல் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இது தமிழ்நாட்டின் கருப்பு நாள். மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மக்களின் கருத்துகளுக்கும் அரசு கட்சியின் எதிர்ப்புக்கும் செவிமடுக்காத தமிழ்நாடு அரசுக்கு வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.
காங்கிரஸ் கட்சி தலைவரான ராகுல் காந்தி பிரிவினை வாதத்தை தூண்டக் கூடிய வகையில் பிரிவினைவாத தலைவர்களை தனது சுற்றுப்பயணத்தின் போது சந்தித்து வருகிறார்.
கல்வியில் முன்னேறிய மாநிலமாக இருந்த தமிழ்நாட்டை தொடர்ந்து கல்வி கட்டமைப்பு மேம்படுத்த நிலையில் தற்போது டெல்லி முதலமைச்சரை அழைத்து வந்து, ஒரு காலத்தில் கல்வியில் நம்மை விட பின்தங்கி இருந்த மாநிலமான டெல்லியை போல் தமிழ்நாட்டிலும் அரசு பள்ளிகள் மேம்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுவது கண்டு தனது ரத்தம் கொதிக்கிறது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு பள்ளிகள் ஆகியவற்றை முழு அளவில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘ராகுல் காந்தி நடைபயணத்தால் 2024ஆம் ஆண்டில் அரசியல் மாற்றம் ஏற்படும்’ - நாராயணசாமி