கடலூர்: வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில் ஃபெங்கல் புயல் உருவாக வாய்ப்பு உள்ள காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம் நோக்கி வரும் நிலையில், கடலூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதால், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசுத் துறை உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஒவ்வொரு துறையினரும் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும், அவசர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்ட நிலையில் அந்த கட்டுப்பாட்டு அறையை அவர்கள் ஆய்வு செய்தனர்.
அதன் பிறகு கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் 61 இடங்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் கூடுதலாக கண்காணித்து வருவதாகவும் மேலும் அந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கையிருப்பு வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உருவாகிறது ஃபெங்கால் புயல்! உஷார் நிலையில் தமிழகம்
மேலும், கடலூர் மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கையாக 42 முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், பொதுமக்கள் தேவைப்பட்டால் அந்த முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். அத்துடன், கடலூரில் மண்டல அளவில் 21 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து துறை அதிகாரிகளைக் கொண்ட இந்த குழுக்கள் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கண்காணிப்பில் இருப்பார்கள் எனவும் மாவட்டத்தில் உள்ள நீர் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும், மாநில பேரிடர் மீட்பு குழு மற்றும் மத்திய பேரிடர் மீட்பு குழுவினர் கடலூருக்கு வந்து கொண்டிருப்பதாகவும், அவர்களும் வந்து தங்களது பணிகளை மேற்கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்திற்கு மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்துள்ளனர். உதவி ஆய்வாளர் சஞ்சீவ் தேஸ்வால் தலைமையில் 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவும், உதவி ஆய்வாளர் ராஜகோபால் தலைமையிலான தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் 25 பேரும் கடலூர் வந்தடைந்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்