ஐதராபாத்: இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 22ஆம் தேதி பெர்த்தில் தொடங்கிய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இமாலய வெற்றியை பெற்றது.
தொடர்ந்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் டிசம்பர் 6ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக இந்தியா - இந்தியா ஏ அணிகள் இரண்டு நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளன. நவம்பர் 30ஆம் தேதி இந்த போட்டி தொடங்குகிறது.
இந்நிலையில், காயம் காரணமாக முதலாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய சுப்மான் கில், 2வது டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டார் எனத் தகவல் கூறப்படுகிறது. பயிற்சியின் போது இடது கட்டை விரல் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் முதல் போட்டியில் இருந்து விலகினார்.
இந்நிலையில், சுப்மான் கில் முழுமையாக காயத்தில் இருந்து விடுபடவில்லை எனக் கூறப்படுகிறது. 10 முதல் 14 நாட்கள் வரை சுப்மான் கில் ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால், 2வது டெஸ்ட் போட்டியில் கில் விளையாட முடியாமல் போகலாம் எனச் சொல்லப்படுகிறது.
ஒருவேளை சுப்மான் கில் காயத்தில் இருந்து முழுமையாக குணம் பெறும் நிலையில், முதல் முறையாக அவர் அடிலெய்டு மைதானத்தில் களமிறங்குவார். இதற்கு முன் மெல்போர்ன், பிரிஸ்போன் மற்றும் சிட்னி மைதானங்களில் மட்டுமே விளையாடிய அனுபவம் சுப்மான் கில்லுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத கேப்டன் ரோகித் சர்மா தற்போது மீண்டும் அணியில் இணைந்துள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோகித் சர்மா தொடக்க ஜோடியாக களமிறங்கும் நிலையில், கே.எல் ராகுல் 3வது ஒன் டவுனில் களமிறங்குவார் எனக் கூறப்படுகிறது.
அதேநேரம் முதலாவது போட்டியில் பெரிய அளவில் சோபிக்காத தேவதூத் படிக்கலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. அடிலெய்டு டெஸ்ட் போட்டி பகல் - இரவு ஆட்டமாக பிங்க் நிற பந்தை கொண்டு விளையாட திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் இந்திய அணிக்கு பயிற்சி அளிக்கும் விதமாக இரண்டு நாள் பயிற்சி ஆட்டமும் பிங்க் நிற பந்து கொண்டு விளையாடப்பட உள்ளது.
இதையும் படிங்க: மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை! வெளியான உண்மைக் காரணம்!