தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. அதன் இரண்டாவது நாளான இன்று பல்வேறு உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்தார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், “2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 2,424 புதிய ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மக்களின் தேவைகளின் அடிப்படையில் நகரும் ரேஷன் கடைகளை அதிக அளவில் தொடங்குவதற்கு பரிசீலிக்கப்படுகிறது.
முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு வங்கிகள் மூலமாக விவசாயிகளுக்கு தாராளமாகக் கடன் வழங்கப்படும். அதே நேரத்தில் தவறானவர்களுக்கு கடன் வழங்கக் கூடாது என்று முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். ஆகையால், சரியான நபர்களுக்கு முறையான ஆவணங்களைத் தாக்கல் செய்தால் கடன் தாராளமாக வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.