சென்னை: கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயில் உலகப் புகழ் பெற்ற கோயில் ஆகும். நடராஜர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிற்றம்பல மேடையில் ஏறி நின்று, சாமி தரிசனம் செய்ய அனுமதிப்பது வழக்கம். ஆனால், கடந்த சில நாட்களாக கோயில் தீட்சிதர்கள் பக்தர்களை சிற்றம்பல மேடையில் ஏற்றி சாமி தரிசனம் செய்ய தடுத்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்களை தீட்சதர்கள் அவமானப்படுத்துவது மட்டுமல்லாமல், கோயிலில் தீட்சிதர்கள் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, இதுகுறித்து விசாரணை செய்ய இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இவர்கள் விசாரணைக்கு சென்ற போது அறநிலையத்துறை அதிகாரிகளை தீட்சிதர்கள் தடுத்துள்ளனர்.
அதிகாரிகளை தடுத்த தீட்சிதர்கள்: இதனிடையே, ராயப்பேட்டையில் உள்ள சித்தி புத்தி விநாயகர் கோயில் மற்றும் பெரிய பாளையத்து அம்மன் கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளத் துணை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் நேரடியாக சென்று விசாரணை செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. மேலும் அதிகாரிகளை ஆய்வு செய்ய மறுக்கப்பட்டு உள்ளதைப் பதிவு செய்துள்ளோம்.
நடவடிக்கை எடுக்கப்படும்: சட்டப்பூர்வமாக அவர்கள் மீது படி படியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாத இறுதிக்குள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆணையருடன் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்" என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு கையகப்படுத்துவதற்காக தனிச்சட்டம்: முன்னதாக, சிதம்பரம் நடராஜர் கோயிலை தனிச்சட்டம் இயற்றி அரசு கையகப்படுத்த வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்துக்கு மே 6 ஆம் தேதி பதிலளித்த அமைச்சர், சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு கையகப்படுத்துவதற்காக தனிச்சட்டம் இயற்றுவது தொடர்பாக, சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பயந்ததால் பட்டினப்பிரவேசத்துக்கு அனுமதியா..? - அமைச்சர் சேகர்பாபு அளித்த விளக்கம்