கரோனாவால் வீழ்ந்துள்ள தொழில்துறையை முன்னேற்ற மின்னணு வர்த்தகம், சந்தைப்படுத்துதல் குறித்த கருத்தரங்கம், மாநில கொள்கை வளர்ச்சிக்குழு துணைத்தலைவர் பொன்னையன் தலைமையில் சேப்பாக்கம் எழிலகத்தில் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தொழில்துறை செயலாளர், சிட்கோ அலுவலர்கள் மற்றும் தொழில்துறை அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், “கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சரிவால், தற்போது உற்பத்தி அளவு 50 விழுக்காடு அளவிற்கே உள்ளது. இருப்பினும் இக்காலத்தில் கூட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. உலகளவில் தொழில் தொடங்க உகந்த மாநிலம் தமிழ்நாடு என்பதால், கரோனாவிற்கு பிறகு நிறைய நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறி இங்கு தொழில் தொடங்க வாய்ப்புள்ளது. இதனால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் அதிகரிக்கும். அதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.
சாம்சங், ஆப்பிள், ஐஃபோன், அடிடாஸ் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளார். தொழில் தொடங்க ஏற்ற சூழல் இங்குள்ளதால், அந்நிறுவனங்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம். மத்திய அரசு தருவதாக கூறிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை இன்னும் தரவில்லை. இதற்காக மத்திய அரசிடம் தொடர்ந்து கேட்டு வருகிறோம் “ என்றார்.
தொடர்ந்து பேசிய பொன்னையன், “மாநில திட்டக்குழு, மாநில கொள்கை வளர்ச்சி குழு என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீட்டில் கடைபிடிக்கும் கொள்கையில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு தொடர்ந்து முறையிட்டு வருகிறது. மக்கள் தொகை அடிப்படையில் வரியை பிரிக்கும் நடைமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும். முப்போகம் விளையும் உத்தரப் பிரதேசத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. தொழில் துறை மறுபடியும் பழைய நிலைக்கு வருவது மத்திய அரசின் பொருளாதார உதவியைப் பொறுத்துதான் உள்ளது” என்றார்.
இதையும் படிங்க: பால் கொள்முதல் விலையை குறைத்த நிறுவனங்களுக்கு எதிராக பால் முகவர்கள் சங்கம் போர்க்கொடி!