சென்னை புரசைவாக்கத்தில் நடுநிலைப் பள்ளியில் கரோனா காலகட்டத்தில் பணிபுரியும் களப்பணியாளர்களுக்கு வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கபசுரக் குடிநீர், சத்து மாத்திரைகள், சானிடைசர் உள்ளிட்டப் பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர் தரகர் மூலமாக இ-பாஸ் பெறுபவர் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசும்போது, 'தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய முயற்சியால் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தொற்று குறைந்துள்ளது. இந்தத் தொற்றை முழுவதும் கட்டுப்படுத்த தளர்வு உள்ள ஊரடங்கு நீடிக்கும். பொது மக்கள் இப்போது எப்படி ஒத்துழைப்பு வழங்குகிறார்களோ... அதேபோல முழு ஒத்துழைப்பும் வழங்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை குறித்து முதலமைச்சர் இன்று (ஆகஸ்ட் 3) மேலும் ஆய்வு நடத்துகிறார்.
தற்போது இ- பாஸ் நடைமுறை என்பது மக்கள் நலன் கருதியும், தொற்று பரவாமல் இருப்பதற்கும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு அளித்து வருகிறோம். இதில் தகுந்த காரணங்கள் இருப்பின், கட்டாயம் இ-பாஸ் வழங்கப்படும். மேலும் தரகர் மூலமாக இ-பாஸ் பெறுபவர் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.