சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(ஜூலை.1) உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, கல்லூரி மாணவர் சேர்க்கை, வகுப்புகள், தேர்வுகள் நடத்துவது குறித்து, 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
அதன்படி, கல்லூரி மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நடைபெறும். இந்த மாணவர் சேர்க்கை 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு நடைபெறும்.
சென்னை பல்கலைக்கழகம் உள்பட அனைத்து பல்கலைக்கழகத்திலும், எம்.பில் பாடம் திட்டம் தொடர வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைகழகங்களில் பதிவாளர், பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து நியமனங்களும் வெளிப்படைத் தன்மையில் நடைபெற வேண்டும் என்று துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை, கடந்தாண்டு நடைபெற்றது போல் 'DOTE' முறையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். அதேபோன்று ஒற்றைச் சாளர முறையில் ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறும்'.
கடந்த ஆட்சியில் மூன்று பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற ஊழல்களை விசாரிக்க இணைச் செயலாளர்கள், துணை செயலாளர்கள் அடங்கியக் குழு அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: +2 தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது - பொன்முடி